தமிழர் என்போர் யார் என்பதைக் கண்டுகொள்ள உதவும் ஒரு முக்கியமான புத்தகம். தமிழர் யார் என்ற விவாதம் இன்று தமிழ்ச் சூழலில் தீவிரமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த நூலில் இராமாயண உள்ளுறையை நிமித்தமாகக் கொண்டு தமிழர்களின் சாதி அடுக்கை விசாரணைக்கு உள்ளாக்குகிறார் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை. இதற்கு எழுத்து வடிவம் தந்திருக்கிறார் வெ.ப. சுப்பிரமணிய முதலியார். தமிழர் என்னும் பொது அடையாளத்தில் வடுகர்களுக்கு இடமில்லை; அது தமிழ்ச் சாதிகள், வடுகச் சாதிகள் எனப் பிளவுபட்டிருக்கிறது. 1908இல் வெளியான இந்த நூலில், தமிழ்ச் சாதிகளை மட்டுமே கணக்கில் கொண்டு விவாதிக்கிறார் சுந்தரம் பிள்ளை. 1909இல் வெளியான எட்கர் தர்ஸடனின் ‘தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்’ என்னும் ஆய்வு நூலும் இதே நிலைப்பாட்டை கொண்டுள்ளதால் இந்த நூலின் வாசிப்பு ஆர்வமூட்டுவதாய் இருக்கிறது. இதை இராமாயண காலத்தைக் கொண்டு முன்னும் பின்னுமாக தென்னிந்திய மக்களின் நிலையை மூன்று கட்டங்களாகப் பிரித்து விவாதிக்கிறார் சுந்தரம் பிள்ளை. பிறகு சாதிகள் வரையறுக்கப்படுதலில் தென்னிந்திய மக்களின் நிலையை விவரிக்கிறார். இதன் மூலம் தமிழ்நாட்டில் தமிழர்களும், ஐரோப்பியர் வருவதுவரை அவர்களைக் கீழடக்கி மேலாதிக்கம் செலுத்திய வடுகர்களும் ஒரே சமூக அமைப்புக்குள் இல்லை; தமிழர்களின் தனி அடையாளங்கள் இருபதாம் நூற்றாண்டின் முதல் முப்பதுகளில் எவ்வாறு மறுமலர்ச்சி அடையத் தொடங்கின; இதற்கு எதிர்வினையாகத் திராவிடர் என்னும் பொது அடையாளம் எவ்வாறு சுமத்தப்பட்டது போன்றவற்றைக் கண்டுகொள்ள உதவுகிறது இந்த நூல். கிறிஸ்தவத்தின் வருகை தமிழ்ச் சாதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்ற நம்பிக்கைக்கு மாறாக, சாதிகளை இரண்டு மடங்காகப் பெருக்கியிருக்கிறது எனவும், 1909இல் சாணார் பெண்களின் கல்வி கற்கும் ஆர்வத்தை முன்வைத்து சாணார் சாதி விரைவில் உயர்நிலைக்கு வந்துவிடும் எனக் கணித்துள்ளதும் இந்தப் புத்தகத்தின் வாசிப்பை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்தப் பதிப்பில் ‘சிந்தாந்த தீபிகை’ இதழாசிரியர் நீதிபதி நல்லசாமி பிள்ளை எழுதிய விரிவான அறிமுகம் முதல்முறையாகத் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
No product review yet. Be the first to review this product.