சர்வதேச உறவுகள் பற்றிய ஒரு செவ்வியல் ஆராய்ச்சி நூலான இது, போர்ச் சூழலை உருவாக்குகிற உலக அரசியலை இயக்கும் சக்திகளைப் பற்றிய ஒரு தொலைநோக்குள்ள, வலிமைவாய்ந்த பகுப்பாய்வு. *** உலகின் மிகவும் செல்வாக்குள்ள சிந்தனையாளரான சாமுவேல் பி. ஹண்டிங்டன், வெவ்வேறான பண்பாட்டு ‘நாகரிகங்க’ளிடையிலான மோதல்கள்தான் உலக அமைதிக்கு மிகப் பெரிய அபாயம் என்று முன்னறிவிப்புமிக்க இந்த நூலில் வாதிடுகிறார். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு முதன்முதலாக இந்த நூல் வெளியிடப்பட்டது. இன்றைய உலகம் முதலாளியம், கம்யூனிசம் என இரு எதிர்முனைகளால் ஆனதல்ல, மத அடிப்படையிலமைந்த எட்டு வெவ்வேறான குழுக்களால் ஆனது; முஸ்லிம்களின் எழுச்சிப் பரவல், கிழக்காசிய நாடுகளிலும் சீனாவிலும் ஏற்பட்டுவரும் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு மேற்கத்திய ஆதிக்கத்தைச் சவாலுக்கு உட்படுத்துகின்றன; அவை உலக அரசியலை எவ்விதம் மாற்றிக்கொண்டிருக்கின்றன என்பதை இந்த நூல் புத்திப்பூர்வமாகப் பகுப்பாய்வு செய்கிறது. அணுஆயுதப் பெருக்கம், புலம்பெயர்தல், மனித உரிமைகள், ஜனநாயகம் போன்றவற்றில் உள்ள பிரச்சினைகள் எவ்வாறு நாகரிகங்களுக்கிடையிலான மோதலைத் தீவிரப்படுத்துகின்றன; தேசங்களுக்கிடையிலான கருத்தியல் வேறுபாடுகளை, கலாச்சார வேறுபாடுகள் இடப்பெயர்ச்சி செய்கின்ற நிலையில், உலக அரசியல் எவ்வாறு மறுஆக்கம் செய்யப்படுகிறது; பனிப்போர்க் காலத்தின் பழைய ஒழுங்கை உலக முழுவதும் நிகழும் புதிய மோதல்களும் புதிய கூட்டுறவும் எவ்வாறு பதிலீடு செய்துவருகின்றன என்பதையும் இந்த நூல் விவரிக்கிறது. ஜப்பானியம், சீனியம், இந்துத்துவம், இஸ்லாமியம், மேற்கத்தியம் என்ற போர்வையில் கிறித்துவம், யூதேயம் போன்ற ஆதிக்கக் கலாச்சாரங்களிடையே நிகழும் தலைமைக்கான போராட்டம் தவிர்க்க முடியாதது என்ற சிந்தனையைத் தூண்டும் ஹண்டிங்டனின் முடிவு, இன்று ஆப்கான் முதல் சிரியா வரை நிதர்சனமாகி வருகிறது. இதன் மூலம் இன்றைய அமெரிக்க அயல்நாட்டுக் கொள்கையை நாம் புரிந்துகொள்வதற்கு இந்த நூல் இன்றியமையாத ஒன்றாகவும் ஆகியிருக்கிறது.
No product review yet. Be the first to review this product.