யுத்தங்கள் பற்றிய பேச்சு இருந்தாலும் இது யுத்தங்களை மையமாகக்கொண்ட நாவல் அல்ல. இது அடிப்படையில் ஒரு குடும்பத்தின் கதை. விரிவானதும் சிக்கலானதுமான உறவுச் சங்கிலியால் கோர்க்கப்பட்ட ஒரு குடும்பத்தின் அறுபது ஆண்டுக் கதை. வியப்பும் வேதனையும் விரக்தியும் பரவசமும் கொண்ட வாழ்வு காலத்தினூடே பயணிக்கிறது. காலமே அதை வழிநடத்திச் செல்கிறது. மாற்றங்கள் அவை நடக்கும் காலத்தில் முழுமையாக உணரத்தக்கவையாக இல்லை. மாற்றங்களின் வெளிப்பாடுகளை அவற்றின் வேர்களோடு தரிசிக்கச் செய்வது புனைவின் பெரும்கொடை. அந்த அற்புதமான அனுபவத்தை இந்த நாவலில் பெறலாம். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது ஒரு குடும்பத்தின் கதையாக இருக்கும் கதை சற்றே உன்னிப்பாகக் கவனிக்கும்போது ஒரு காலகட்டத்தின் கதையாகவும் மனிதர்களின் கதையாகவும் வாழ்க்கையும் உறவுகளும் மாறிவரும் விதம் குறித்த தரிசனமாகவும் விகாசம் பெறுவதை உணரலாம். கதை நிகழும் களம் இருபதாம் நூற்றாண்டின் அறுபது ஆண்டுகள். உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்புகளும் மாபெரும் மாற்றங்களும் நிகழ்ந்த காலகட்டம். காலனி ஆதிக்கத்தின் தாக்கமும் அதிலிருந்து விடுபடும் திமிறலும் நிரம்பிய இந்தக் காலகட்டத்தில்தான் இந்திய வாழ்வு நவீனத்துவத்துடனான தன் போராட்டத்தையும் மேற்கொண்டது. இந்தப் போராட்டம் தனி மனித வாழ்வையும் குடும்ப வாழ்வையும் சமூக வாழ்வையும் மதிப்பீடுகளையும் பெருமளவில் மாற்றி அமைத்தது. வேரிலிருந்து முற்றாக வெட்டிக்கொண்ட மாற்றங்களும் வேர்களின் தன்மைகளை உள்வாங்கிய மாற்றங்களும் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டத்தின் பெரும் சலனங்களை ஒரு குடும்பத்தின் பின்னணியில் வைத்து நமக்குக் காட்டுகிறது அசோகமித்திரனின் கலை. பிரகடனங்கள் அற்ற இயல்பான வெளிப்பாடாக அமைந்துள்ளதே அசோகமித்திரனின் கலையின் சிறப்பு. அந்தச் சிறப்பை இந்த நாவலிலும் உணரலாம். - அரவிந்தன்
No product review yet. Be the first to review this product.