வேட்டையும் கூத்துமே தொல்குடியின், கூட்டுக் குமுகாயத்தின் அடிப்படையாய் அமைந்து, அதிலிருந்தே இசை, இயல், நாடகம் இன்னபிற கலைகள் யாவும் வளர்ந்தெழுந்தன.
இந்நிலையில், தமிழ்க் குடிகளின் தூய பாவியத்தை வரைந்தெடுக்கும் முனைப்பாகவே மெளனன் யாத்ரிகாவின் ஊர்க்காரி ஒருத்தியின் காதல் வெளிவந்திருக்கிறது. ஐந்திணைகளில் வாழும் குடிகளின் களவும் காமமும் பெருக்கெடுத்தோடும் ஒவ்வொரு கவிதையிலும் கொலையும் தற்கொலையும் தலைவி, தலைவன் என்னும் தன்னிலைகளுக்குள் கருவிலிருந்து மரணம் வரை உடன் நிழலாகப் பின் தொடர்கின்றது.
அறுபத்தைந்து அத்தியாயங்களாக எழுதப்படவேண்டிய காமமும் வாதையும் வலியும் அறுபத்தைந்து பாக்களாக எழுதப்பட்டுள்ளன. தூமையும் சாண்டையும் விந்தும் கமழும் இப்பனுவலின் புழுக்க நெடிக்குள், கொலைச் சுரக்கும் குருதியின் கவிச்சையைத் தவிர்த்து தொகுக்கப்பட்ட சங்க அகப்பாடல் பனுவல்களில் விடுபட்ட பக்கங்களை எழுதிச் சேர்த்திருக்கிறார் மெளனன் யாத்ரிகா. ஒரே அமர்வில் இப்பனுவலை வாசித்து முடித்ததும், அணங்கின் அல்குல் வாடையே தமிழ்ப் பாவியத்தின் உள்ளடக்கம் என்று எனக்காக முதல் வரியை எழுதத் தொடங்குகிறேன்.
- ரமேஷ் பிரேதன்
No product review yet. Be the first to review this product.