இந்தக் கதையில் என்னைக் கவர்ந்த பல அம்சங்களில் முக்கியமானது, என்னுடைய பரந்த வாசிப்பு அனுபவத்தில் ஓர் ஆணின் மனதை எந்தப் பெண்ணும் இந்த அளவு நுணுக்கமாக எழுதியதில்லை. காரணம், பெண்களின் மனம் என்னதான் ஆழம் காண முடியாத கடல் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் பல ஆண் எழுத்தாளர்கள் பெண்ணின் மனதை ஆழம் கண்டு எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண் – அதிலும் மனுஷா இந்தக் கதையை எழுதிய போது இந்தக் கதையின் நிஷாவைப் போலவே ஓர் இளம் பெண் – ஓர் ஆணின் மனதை இந்த அளவு நிர்வாணமாக்கிப் படைத்திருக்கிறார் என்பதை நம்ப முடியவில்லை.
எழுத்தாளர்களின் முக்கியத் தகுதி கூடு விட்டுக் கூடு பாய்தல் என்று எப்போதுமே சொல்லி வந்திருக்கிறேன். ஆதி சங்கரரை விவாதத்தில் தோற்கடிப்பதற்காக மந்தன மிஷ்ராவின் மனைவி உதய பாரதி அவரிடம் காமம் பற்றிய கேள்விகளை முன்வைத்த போது துறவியான ஆதி சங்கரர் தன் உடலிலிருந்து உயிரைப் பிய்த்து எடுத்துக் கொண்டு ஓர் உயிரற்ற பிரேதத்தில் தன் உயிரைச் செலுத்தி அந்தப் பிரேதத்தின் உடலின் மூலம் உயிர் கொண்டு எழுந்து காமம் பயின்று வந்து உதய பாரதியின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் என்று வாசித்திருக்கிறோம்.
அப்படித்தான் மனுஷா என்ற இளம் பெண் எழுத்தாளர் ஆண்களின் மனதில் ஊடுருவிப் பாய்ந்து அங்கே நடக்கும் லீலைகள் பற்றி எழுதியிருக்கிறார். இது தமிழில் இதுவரை நிகழாதது. இதன் காரணமாகவே இந்த நாவல் விசேஷமான கவனத்துக்குரியதாகிறது.
- சாரு நிவேதிதா
No product review yet. Be the first to review this product.