என்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது. சிரிப்பை அடக்குவதற்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஜெமினி கணேசன் பத்தி என்ன நினைக்கறீங்க? அவன் என்னோட ஆதி கால நண்பன். திருவல்லிக்கேணியில குப்பு முத்து முதலி தெருவில ஒரு மாடியில நான் குடியிருந்தேன். அப்ப அவன் 'தாய் உள்ளம்' படத்துல நடிச்சிக்கிட்டிருந்தான். அப்ப அவனுக்கு நான் காமெடி எப்படி பண்ணனும், பேத்தாஸ்னா எப்படி பண்ணணும், லவ் சீன் எப்படி பண்ணனும்னு நடிச்சுக் காட்டுனேன். அடே அம்பி, இத்தனை வருஷம் ஆச்சேடா! இன்னும் நடிப்புல எந்த முன்னேற்றத்தையும் காணுமேடா! நீ போன ஜென்மத்துல வட்டிக் கடை வைச்சிருந்தப்படா, படுபாவி! சிவாஜி கணேசன் பத்தி உங்க அபிப்ராயம் என்ன? அவன் நல்ல ஆக்டர்! பட், அவனைச் சுத்தி காக்காக் கூட்டம் ஜாஸ்தி இருக்குது. அந்த ஜால்ரா கூட்டம் போயிடுச்சின்னா அவன் தேறுவான். எம்.ஜி.ஆர். பத்தி உங்க அபிப்ராயம் என்ன? அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். பேசாம கம்பவுண்டராப் போகலாம். மனத்தில் பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத காரணத்தாலேயே தமிழ் சினிமா உலகம் புறக்கணித்த மிகப்பெரிய கலைஞர் ஜே.பி. சந்திரபாபு. நடிப்பு, இசை, நடனம், இயக்கம், எழுத்து என்று சினிமாவில் அவருக்குப் பரிச்சயமில்லாத துறைகளே இல்லை. மிகப்பெரிய கனவுகளுடன், மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின் திரையுலகுக்கு வந்த சந்திரபாபு, மிகக் குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகள் செய்துவிட்டு இறந்துபோனவர். தமது சொந்த வாழ்க்கையின் ஆறாத சோகங்களை மறைத்துக்கொண்டு மக்களைச் சிரிக்கவைத்த மகத்தான கலைஞர். சற்றும் நம்பமுடியாத அதிரடிக் கருத்துகளை அடிக்கடி வெளியிட்டு, திரைத்துறையினரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியவர். ஆனால் சந்திரபாபு பேசியதெல்லாம் சத்தியம். அந்தக் காலத்து முன்னணிக் கலைஞர்கள் பலருடனான தமது கசப்பான அனுபவங்களை சந்திரபாபுவே பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களெல்லாம் அவரது கண்ணீரை அதிகமாக்கியவர்கள். பதிலுக்கு சந்திரபாபு வெளிப்படுத்தியது புன்னகை, புன்னகை மட்டுமே.
No product review yet. Be the first to review this product.