மக்களை நேசித்த மாபெரும் தலைவர்களை சாதி அடையாளத்துக்குள் சுருக்கும் துயரம் நம் தேசத்தில் மட்டுமே நிகழ்கிறது. டாக்டர் அம்பேத்கருக்கும் அதுவே நிகழ்ந்தது. இந்தியாவுக்கே ஒளிவீசும் அறிவுச்சூரியனாக இருந்த அவரின் பெருமைகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தெரியாதபடி மறைக்கப்பட்டன என்றே சொல்ல வேண்டும். பாபாசாகேப் அம்பேத்கர் வெறும் தலித் தலைவரா? இல்லை... இல்லை... இல்லை. வெளிநாடு போய்ப் படித்து இரண்டு டாக்டர் பட்டங்களைப் பெற்ற முதல் இந்தியர் அம்பேத்கர். 69,000 புத்தகங்களுடன் அவர் வைத்திருந்த நூலகம், இந்தியாவிலேயே பெரிய தனிநபர் நூலகமாக இருந்தது. ஓயாமல் படித்த அவர், தன் கல்வியையும் சிந்தனைகளையும் இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டுக்காகவே பயன்படுத்தினார். தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை உரிமை கிடைக்கக் காரணமாக இருந்தவர்; தொழிற்சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமையைப் பெற்றுத்தந்தவர்; பெண்களுக்கு மகப்பேறு விடுப்பும், ஆண்களுக்கு இணையான ஊதியமும் கிடைக்கக் காரணமாக இருந்தவர்; இந்தியாவில் ரிசர்வ் வங்கி அமைய அடித்தளமிட்டவர்; பொதுத்துறை நிறுவனங்கள் பற்றிப் பெருங்கனவு கண்டவர். மின்சாரத்தை எல்லோருக்கும் பயன்படும் வசதியாக ஜனநாயகப்படுத்தியவர்; தலித்துகள் மற்றும் பழங்குடியினர் போல பிற்படுத்தப்பட்டோரும் இட ஒதுக்கீடு பெற வேண்டும் என்று போராடியவர்; பெண்களுக்குச் சொத்துரிமையும் பிற உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்று போராடி அதற்காகவே தன் மத்திய அமைச்சர் பதவியைத் துறந்தவர். அந்த மகத்தான ஆளுமையின் அத்தனை பரிமாணங்களையும் பேசும் முழுமையான தொகுப்பு நூல் இது. தமிழகத்தில் இருக்கும் அம்பேத்கர் சிந்தனையாளர்கள் தொடங்கி சர்வதேச அளவில் அம்பேத்கரின் அரசியலை ஆய்வு செய்பவர்கள் வரை பங்களித்திருப்பது இந்த நூலின் சிறப்பு. தமிழ் வாசகர்கள் மத்தியில் அம்பேத்கர் பற்றிய உன்னதமான ஓர் உரையாடலைத் தோற்றுவிக்கும் நூலாக இது வரவேற்பு பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
No product review yet. Be the first to review this product.