வார்ஸா நகரின் சரித்திர நிழலில் அலையும் ஒரு தமிழனின் பார்வையினூடாக, பலரின் கதைகள் வருகின்றன. ஒரு கதையைக் குறுக்கும் நெடுக்குமாகப் பல கதைகளாய் பின்னும் சந்திரன், யுத்தம் தோய்ந்த பர்மாவிலிருந்து கோவைக்கு வந்தவர்களின் ஞாபகத்தோடு வாழ்கிறான். கிழக்கு, மேற்கு எனும் உலக முரண்களின் சங்கமமாய் வெளிப்படுகிறான். இரண்டாம் உலகப்போர் இடிபாடுகளையும் பெண்ணுடல் மீதான எண்ணங்களையும் சிந்தனையில் கொண்டு அலைகிறான். சரித்திரம் வழங்கிய மனநோயைச் சுமக்கும் நகரத்தில் தமிழ்க்கதையை ஐரோப்பியர் அனைவரும் வாசிக்கும்படி கூறுகிறான். இதற்கிடையில் ஒரு அரசியல்வாதி தோன்றி ஆதிவாசிகளின் லாட்ஜ் ஒன்றிலிருந்து பறந்துபோகிறான். பஞ்சாப், இலங்கை, ஆப்பிரிக்கா என நாடுகளைத் தாண்டும் ஒருவன் மின்சாரம் பாய்ச்சப்பட்டு இறந்தும்போகின்றான். சுற்றிச்சுழலும் கதையில் சந்திரனும் கடவுள் பேசுவதைக்கேட்கும் சிவநேசமும் எதார்த்தத்தையும் மாயத்தையும் கொண்டுவருகின்றனர். அகப்பயணம், சிறைவாழ்க்கை, வானத்தில் தோன்றும் மலர், நடந்தபடி பேசும் கடிகாரம் என பல நிகழ்வுகள் இந்நாவலில் குறிப்புகளாகின்றன. குடும்பம் வடிவம் இழக்கிறது. கிழக்கத்திய நாகரிகத்தின் பிரதிபலிப்பாய் மேற்கத்தியம் ஆகிறது. எதையோ இழந்தும் ஆன்மீகம் மேலுருவாகவும் ஒன்றைப் பற்றுவதற்கான நம்பிக்கையின்றியும் அனைத்தும் தேடல்கொண்டு அலைகின்றன. கடைசியாக ஒரு ரயில்வே நிலையத்தில் எங்குப் போவதெனத் தெரியாமல் ஸ்தம்பித்து நிற்கிறான் நாவலின் மையப்பாத்திரம். இதனால்தான் இந்நாவலுக்கு கனடா இலக்கியத்தோட்டமும் சிறந்த மொழிபெயர்ப்பு நாவலென கர்நாடக அரசும் விருதுகளை வழங்கியிருக்கின்றன.
No product review yet. Be the first to review this product.