இடுங்கும் குளிர் நவம்பர் மாதத்தில் ஒருநாள் வின்சென்ட் மங்காசுக்கு நடந்தான். அவனது கையிலோ, மனதிலோ எதுவுமில்லை. நடந்தவன், சுரங்கச் சுவருக்கு வெளியே இருந்த இரும்புச் சக்கரத்தில் உட்கார்ந்து கொண்டான். மனம் விச்ராந்தியாய் இருந்தது.
அப்போது வயதான ஒரு சுரங்கத் தொழிலாளி வாசல் வழியே வெளியேறி வந்தான்...
கறுப்புத் தொப்பி, கரிபடிந்த சீருடை – கைகள் பேண்ட் – பாக்கெட்டில் இருந்தன. முழங்கால்கள் பேண்ட்டின் வெளியே முட்டித் தெரிந்தன. அந்த உருவமும், அவனது நடையும் வின்சென்ட்டின் மனதில் என்னவோ கிளர்ச்சி செய்தன.
தனது சட்டைப் பைக்குள் கைவிட்டபோது, அப்பா எழுதிய கடிதமும், ஒரு பென்சிலும் கிடைத்தன. கடித உறையின் மேலே, விரல்களின் நடுவே பென்சில் நர்த்தனம் புரிந்தது. உடனே அந்த வயதான தொழிலாளியின் உருவம் அங்கே ஓவியமாய்ப் பதிந்துவிட்டது!
சில நிமிடங்களுக்குப் பிறகு இளைஞன் ஒருவன் வெளிப்பட்டான். அவன் நல்ல உயரமாய் – திடமாய் இருதான். அதே சீருடை. தனது கையில் வின்சென்ட் வைத்திருந்த கடிதத்தின் மறுபக்கம் வெறுமையாக இருந்தது. மீண்டும் விரல்கள் பென்சிலைப் பிடித்தன. கோட்டோவியமாய் அந்த இளைஞனின் உருவம் அங்கே பதிவானது!
அனிச்சையாகவே அந்தச் செயல் நடந்தது. அவர்களை வரைய வேண்டுமென வின்சென்ட் நினைக்கவில்லை. உள்ளிருந்த ஏதோ ஒரு உந்துசக்தி அவனைச் செயல்படுத்தியது.
வின்சென்ட் தனக்குள்ளிருந்த ஓவியனை அடையாளம் கண்ட நாள் அதுதான்!
No product review yet. Be the first to review this product.