‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் உடலுக்கு எது நன்மை என்று ஆராயாமல் ஃபாஸ்ட், ஜங்க் ஃபுட்களையும், காற்றடைத்து உப்பிய உரையில் -‘படம் எடுத்து ஆடும்’, காரசாரமான நாகரீக பொட்டேடோ சிப்ஸ்களையும் வரட்டு கௌரவத்துக்காக உண்பது. தற்கால நிலையில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் வாய் ருசிக்காக மட்டுமே வசீகரமான உணவுகளை உட்கொள்கின்றனர் என்ற ஆதங்கத்தையும், எதிர்கால சந்ததியைப் பற்றிய கவலையையும் தவறான உணவை உண்பதை எப்படித் தவிர்த்து ஆரோக்கியத்துக்காக நம் பாரம்பரிய உணவை உண்பது என்பதைப் பற்றியும் விரிவாக எழுதி, ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் நூல் ஆசிரியர். யுத்தம் என்றாலே தனி நபர் ஒருவரின் போராட்டமல்ல; நாடே ஒன்று இணைந்து யுத்தம் புரிய வேண்டிய வலிமையான எதிரி ஒருவன் இருக்கிறான் என்று புரியும். உலகச் சந்தை என்ற போர்வையில் சுயநலக்காரர்கள் கடை விரிக்கும் எதிரியைப் புரிந்துகொண்டு தீய உணவுக்கும், நோய்களை உண்டாக்கும் உணவுக்கும் எதிராகப் போராட வேண்டி இருப்பதை விளக்குகிறார். பாரம்பரிய தானியங்களின் நன்மைகளையும், உணவு தயாரிக்கும் பக்குவத்தையும் நாம் அசட்டை செய்வதைப் புரிந்துகொண்டு, வளரும் நம் சந்ததிக்கு சரியான விழிப்பு உணர்வை ஏற்படும் விதத்தில் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. ஜூனியர் விகடனில் தொடராக வந்து வாசகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது. அடுத்த சந்ததியையும் தோள் சேர்த்துக்கொண்டு யுத்தத்தை வெற்றிகரமாக முடிப்பது இப்போது நம் அனைவர் கையிலும் இருக்கிறது.
No product review yet. Be the first to review this product.