சாதி - தீச்சுவாலையைவிட கொடுஞ்சூடு நிறைந்த சொல்லாக மருவிக் கொதிக்கிறது. தொழிலை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட சாதி, இடையே இழிவான தொழில் செய்பவன் இழிந்த சாதி என ஆதிக்க சமுதாயம் மனிதத்தைக் கூறுபோட்டுப் பிரித்தது. இதன் விளைவு, தலித்துக்கள் மீதான தொடர் தாக்குதல்கள் மற்றும் அவர்களது உடைமைகள் தீயிடப்படுவதும், தலித் பெண்கள் காட்டுமிராண்டித்தனமாக கற்பழிக்கப்படுவதும் ஆகும். சாதியம், பள்ளிகளில் தன் கோர நாக்கை விரிக்கிறது. தலித் மாணவர்கள் மீதான ஆதிக்கத்தை ஆதிக்க சாதி மாணவர்கள் செலுத்தும் நிலையும் ஒரு புறமும், வழிபாட்டுத் தலங்கள் தீண்டாமை எனும் கொடுமரம் வேர் பிடித்து விறுவிறுவென வளர்ந்து தலித்துக்களின் கழுத்தை நெரிக்கிறது. மலத்தை வாயில் ஊற்றி மனிதத்தைக் கொன்று புதைத்த தமிழகத்தில், களத்தில் நின்று பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடி வருகிறார் எவிடன்ஸ் கதிர். மனிதர்களை சாதியம் எரிக்கிறபோது, கொல்லுகிறபோது, பலத்த தாக்குதல் நடத்துகிறபோதெல்லாம் ஒரு தீர்க்கதரிசனக் குரல் கேட்கும். அங்கெல்லாம் பறக்கத் தொடங்குவேன். பாதிக்கப்பட்ட மக்கள் உயிரையும் மானத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக கதறுகிறபோதெல்லாம் அவர்களோடு இருந்து நானும் கதறுவேன். ஒரு நாளும் அவர்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை. என் பயணம் உயிர்ப்பு மிகுந்தது. நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் கலந்தது என்ற அறிமுகம்தான் எவிடன்ஸ் கதிர் என்ற களப்போராளியின் அடையாளம். விளிம்பு நிலை மக்களின் உயிர்நிலைக்காக தன் வாழ்நாளில் எதிர்கொண்ட வழக்குகளையும், தலித் மக்களின் மீதான அடக்குமுறை களையும், கவுரவக் கொலைகளையும் வாக்குமூலங்களாக இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் எவிடன்ஸ் கதிர். குரலற்றவர்களின் குரலாக ஒலித்த ஒரு களப் போராளியின் வாக்குமூலத்தை வாசிக்க பக்கத்தைப் புரட்டுங்கள்.