அகவிழி பேசும் கலைமனத்தின் சொல்லாடல்கள் ஒரு ஒற்றைப்பறவை தன் கதையை தானே சொல்வதுப் போல... அதிசயம் நிறைந்த உலகில் அதிசயிக்கத் தக்க மனிதர்களாய் இருவர் தங்கள் வாழ்வெனும் பயணத்தின் பாடுகளை சித்திரங்களினாலும், எழுத்துக்களினாலும் வடிவமைத்துச் செல்கின்றனர். ஒருவர் வெளிச்சத்தில் கண்டதை இருட்டில் வரையும் ஓவியர் மனோகர் தேவதாஸ், மற்றொருவர் இருட்டில் கழிந்த வாழ்வை வெளிச்சத்தில் எழுதும் தேனி சீருடையான். இருவரும் காலத்தை ஊடுருவிய பிரக்ஞை உடையவர்கள். கலை என்பது ஒரு வெளிப்பாடு, கலைஞன் என்பவன் தனது உள்ளுணர்வை வெளிக்கொணரும் கருவி. தன் மனச் சுதந்திரத்தை, தன் எண்ணத்தை பகிர்ந்து கொள்ளும் யுக்தி, கலைஞன் தன் மனக்கண்ணில் காணும் காட்சியை மற்றவரும் பார்க்க செய்யும் வழி எதுவோ அதுவே கலை எனப்படுகிறது. மனித மனம் இந்த கலையுணர்வை வெளிக்கொணர ஏற்படுத்திக் கொண்ட வகைப்பாடு தான் இசை, ஓவியம், சிற்பம், எழுத்து இன்னபிற. கலையம்சம் இல்லாத மனிதம் இல்லை. பயிற்சியும், சந்தர்ப்பமும் வாய்க்கப்பட்ட கலைஞர்கள் வெளியுலகில் தங்கள் எண்ணங்களை கலக்கின்றனர். புதிர்கள் நிறைந்த நம் மனம் புறக்கண்ணால் பார்க்கக்கூடிய அனைத்தையும் பாதுகாக்கும். உணர்வுகளோடு அழுந்திய காட்சிகளை அது மறப்பதில்லை. கலைஞனின் மனதில் ஏற்படும் உணர்வை நம் மனதில் அவர் உணர வைக்கும் திறனே கலை வடிவம் பெறுகிறது. அதுபோல் ஓவியர் மனோகர் தேவதாஸ் என்ற வண்ணங்களின் தூதுவன் கண்களால் பார்த்தவற்றை அப்படியே தோரணமாய் சித்தரிக்கும் அதிஅற்புத கலைஞன். பள்ளிப்பருவத்து கிறுக்கல்கள் பிற்பாடு ஓவியங்களாக மாறுகின்றன. இவை எல்லாமே அர்த்தமுடையவை. "எனக்கு நினைவு தெரிவதில் இருந்து நான் ஓவியம் வரைகிறேன். முதலில் யானை, புலி, சிங்கம் என்பன போன்ற சித்திரங்களை சிறுவயதில் பாலர் பள்ளிகளில் வரைந்தேன். பின்பு நடுநிலைப்பள்ளியில் ரோடுரோலர், புகைவண்டி, இரண்டாம் உலகப்போர் விமானம் போன்றவற்றை வரைந்தேன். உயர்நிலைப்பள்ளியில் என் ஆர்வம் பெண்களைப்பற்றி வரைவதில் மாறியது. சேலை அணிந்த பெண்கள் மற்றும் உடையணியாத பெண்களின் ஓவியங்களை வரைந்தேன்" என்கிறார் மனோகர் தேவதாஸ். கலைமனத்தின் தன்மை ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு மாறுபடும் என்பதை விளக்குகிறார் மனோகர். தன் ஓவியங்களுடன் அது வரையப்பட்ட தருணம் பற்றிய சொல்லாடல்களையும் நிகழ்த்தி இருக்கிறார். ஆயினும், இவரது ஓவியங்களின் சிறப்பு என்ன? மனோகர் தேவதாஸ், ஓவியம் வரைய தொடங்கிய காலத்தில் அவருக்கு பார்வை புலப்பட்டது. அவர் கண்ணால் காண்பதை வரைந்தார். காலம் செல்லச்செல்ல அவருக்கு பார்வை குறைபாடு நோய் ஏற்பட்டு, பார்க்கும் திறன் குறைந்தது. வண்ணங்களில் வாழும் கலைஞனுக்கு எது எந்த நிறம் எனக் கண்டுணர முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் தான் வெளிச்சத்தில் கண்டதை, இன்னமும் இருட்டில் வரைந்து கொண்டிருக்கிறார். இதுதான் அவரது ஓவியங்களின் சிறப்பு. வண்ணங்களை எப்படி கையாளுகிறார்? அவரது ஓவியங்களின் உயிர்ப்பு எத்தகையது? புறவிழியில் புரையோடியானலும், அகவிழியால் உலகை காணும் விதத்தை அவரது ஓவியங்களில் காணும் போது நிச்சயம் சிலிர்த்துப் போவீர்கள். நிறங்களின் மொழி என்ற இந்த நூலில் இது மனோகரத்தின் சிறப்பு. இன்னொன்று... தேனி சீருடையானின் சீர்மிகு எழுத்துக்கள். தேனீ சீருடையான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது பார்வை இழக்கிறார். பிறகு பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது பார்வை திரும்புகிறது. பார்வை இழந்த அவர் பார்வையற்றோர் பள்ளியில் மாணவன். அந்த பள்ளியில் சேர அவர் ரயிலில் பயணப்பட்டது முதல் பள்ளி விடுதியில் சக பார்வையற்ற மாணவர்களுடன் சேர்ந்து படித்த, விளையாடிய அனுபவங்களை, துயரங்களை அவர் விவரிக்கிறார் இந்த புத்தகத்தில் நாவல் வடிவில். நிறங்களின் உலகம் என்ற பெயரில் 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த நாவல் தற்போது விகடன் பிரசுரம் மூலம் புத்தம்புதிதாக அச்சேறியிருக்கிறது. நிறங்களின் உலகம் படித்துப் பார்ப்பவர் அத்தனை பேர் கண்களிலும் நீர் அரும்பும். உலக இலக்கியத்திற்கு ஒப்பான நாவல் இது. ரஷ்ய இலக்கியமான கொரலன்காவின் 'கண் தெரியாத இசைஞன்' போன்ற மிகக் தரமான வாழ்வியல் படைப்பு என்பதை நிறங்களின் உலகத்தை வாசிக்கப்போகும் நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள். உன்னத கலைமனத்தின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட மனோகர் தேவதாசின் ஓவியங்களையும், தேனி சீருடையானின் எழுத்துக்களையும் ஒருங்கே நிறங்களின் மொழியாக வெளியிடுவதில் விகடன் பிரசுரம் பெருமை கொள்கிறது. வாசிக்கத் தொடங்குங்கள். அகவிழி விரியும்.
No product review yet. Be the first to review this product.