மனதுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய, தெம்பைத் தருகிற தன்னம்பிக்கைத் தொடர்கள் எவ்வளவு தந்தாலும் வாசகர்கள் படிக்கத் தயங்குவதே இல்லை. மனதுக்கு உற்சாகமூட்டும் ஒரு தொடர் முடிந்தவுடனே அடுத்த தொடர் என்ன என்ற ஆவலோடு காத்திருப்பார்கள்.
விற்பனையில் இரண்டு லட்சம் பிரதிகளை நோக்கி சாதனை படைத்துக் கொண்டிருக்கும் சுவாமி சுகபோதானந்தா எழுதிய ‘மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்’, அரிய வேதாந்தக் கருத்துகளை எளிய முறையில் சுவாமி தயானந்த சரஸ்வதி அளித்த ‘மனம் மலரட்டும்’ ஆகிய இரண்டு வெற்றித் தொடர்களே வாசகர்களின் வரவேற்பு சான்றுகள்.
இந்த வரிசையில், சொல்லாற்றலும் எழுத்தாற்றலும் கொண்ட அன்பர் சுகி.சிவம், ‘மனசே, நீ ஒரு மந்திரச்சாவி’ என்ற தலைப்பின்கீழ் ஆனந்த விகடனில் எழுதிய தன்னம்பிக்கைத் தொடர் வாசகர்களின் மனதில் மற்றொரு மாணிக்கக்கல்லாக ஒளிவீசுகிறது. தன்னை வளர்த்துக் கொள்ளுதல், நேரத்துடன் செயல்படல், தனிமனித முன்னேற்றம், மனிதன் வாழ வேண்டிய விதம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்ட சுகி.சிவம் சின்னச் சின்ன குட்டிக் கதைகள், சம்பவங்கள் மூலமாக வாசகர்கள் மத்தியில் நம்பிக்கை ஒளி ஏற்றியிருக்கிறார். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘மனசே, நீ ஒரு மந்திரச்சாவி’ தொடரை புத்தகமாக வெளியிடும் இதே சமயத்தில், அவள் விகடனில், சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாத முடிவு வரையில் நாம் கொண்டாடும் சிறப்புப் பண்டிகைகளைப் பற்றி சுகி.சிவம் ஆன்மிக உணர்வு குறையாமல் இலக்கியத் தரத்தோடு படைத்த ‘வழிபாடு’ கட்டுரைத் தொகுப்பையும் இணைத்து ஒரே புத்தகமாகத் தருவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
‘மனசே, நீ ஒரு மந்திரச்சாவி’, ‘வழிபாடு’ இணைந்த இந்த அருமையான புத்தகத்தை வாசகர்கள் பெரிதும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.
No product review yet. Be the first to review this product.