நம் அன்றாட வாழ்விலிருந்து பண்பாட்டு அறிவுத் தளங்கள் வரையிலும் நீக்கமற நிறைந்திருக்கும் செயல்பாடு மொழிபெயர்ப்பு. பேச்சையோ எழுத்தையோ இன்னொரு மொழியில் தருவது எளிய செயல்பாடு அன்று. ஒவ்வொரு சொல்லும் தொடரும் பல்வேறு பொருட்கோடலுக்கு வழிகொடுப்பவை. குறிப்பிட்ட சொல் அல்லது தொடரை யார், எப்போது, எங்கே, என்ன நோக்கத்துடன் சொன்னார் அல்லது எழுதினார் என்பதைப் பொறுத்து அதற்குப் பல்வேறு பொருள்கள் உருவாகிவிடுகின்றன. முற்றிலும் மாறுபட்ட பொருள் தரும் மரபுத்தொடர்களும் சொலவடைகளும் பிரதியில் கலந்திருக்கின்றன. பண்பாட்டு அரசியல் சூழல்களும் நாடு, இனம், சாதி, மதம், பாலினம், வட்டாரம், காலம் முதலான பலவும் ஒரு பிரதியின் பொருளைத் தீர்மானிக்கின்றன. இவை அனைத்தும் இணைந்து மொழியாக்கத்தை வெளிச்சம் குறைவான இடத்தில் வழுக்குப்பாதையில் கைகளைக் கட்டிக்கொண்டு நடப்பது போன்ற அபாயகரமான சாகசமாக உணரச் செய்கின்றன. மொழிபெயர்ப்பு மரபுகள், மொழியியல் பார்வைகள், மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள், தேவைகள் எனப் பல்வேறு கூறுகளைக் கவனத்தில் கொண்டு மொழிபெயர்ப்பு என்னும் மிகச் சிக்கலான புதிரை விடுவிக்க முயல்கிறார் பேராசிரியர் கே. தியாகராஜன். பண்டைய இலக்கியங்களின் மொழியாக்கத்திலிருந்து இன்றுவரையிலுமான மொழியாக்கங்களின் முறைமைகளையும் சவால்களையும் பல்வேறு எடுத்துக்காட்டுக்களை முன்வைத்து விவரிக்கிறார்.
No product review yet. Be the first to review this product.