பாவண்ணனின் சிறுகதைகள் கருணையின் இழைகளாலும் அன்பின் இழைகளாலும் நெய்யப்பட்டவை. கரிய இருள் சூழ்ந்த பாதையின் ஓரமாக காற்றில் நடுங்கியபடி ஒளியுமிழும் சுடரென அக்கதைகள் அமைந்திருக்கின்றன. எளிய மனிதர்களின் அவலம், இயலாமை, ஏமாற்றம், சமரசங்கள், பரவசங்கள், குமுறல்கள் ஆகியவற்றின் சித்திரங்களால் பாவண்ணன் கதையுலகம் நிறைந்திருக்கிறது. வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே உரியதாக உள்ள உலகத்தின் முன் எப்படியாவது உயிர்த்திருந்தால் போதும் என்ற எண்ணத்துடன் வாழும் கோடிக்கணக்கானவரின் கண்ணீர்த்துளிகளை பாவண்ணனின் சிறுகதைகள் காட்சிப்படுத்துகின்றன. துயரத்தின் சுமைகள் தாளாது சரிந்து விழுவதையும் ஒரு நீண்ட பெருமூச்சின் வழியாக வலிமையைத் திரட்டிக்கொண்டு மீண்டு வருவதுமான வாழ்வின் ஆடலையும் விசித்திரத்தையும் பாவண்ணன் முன்வைத்திருக்கும் வாழ்க்கைத் தருணங்களில் காணமுடிகிறது. சின்னஞ்சிறிய சிமிழொன்றில் அடைத்து எடுத்துவரும் நீரின் வழியாக ஓர் ஆற்றையே காணமுடிந்த கண்கள், பாவண்ணனின் வாழ்க்கைத் தருணங்கள் வழியாக விரிந்துசெல்லும் எளியோரின் துயரத்தையும் வேதனை நிறைந்த உலகத்தையும் எளிதாகக் கண்டுவிடும்.
No product review yet. Be the first to review this product.