அசோகமித்திரனின் அதிகம் அறியப்படாத சில பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது இந்த நூல். உணர்ச்சிகளை அதிகம் வெளிக் காட்டிக்கொள்ளாதவராக அறியப்படும் அசோகமித்திரன், இலக்கியக் கொள்கைகள், போக்குகள் ஆகியவை குறித்துத் தீவிரத்தன்மையுடன் இதில் பேசுகிறார். படைப்புகளையும் அவற்றின் மீதான விமர்சனங்களையும் கறாராக விமர்சிக்கிறார். இதழ்களின் போக்குகளை மதிப்பிடுகிறார். தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்குப் பதில் சொல்கிறார். சமகால எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி வெளிப்படையாகக் கருத்துச் சொல்கிறார்.
மொழிபெயர்ப்பு, படைப்பில் தொழிற்படும் மொழி, புனைவுலக யதார்த்தம், விமர்சன அறம் ஆகியவை பற்றியெல்லாம் அசோகமித்திரன் சற்று விரிவாகவே தன் பார்வைகளை முன்வைத்திருக்கிறார். இலக்கிய உலகில் அதிகம் கவனம்பெறாத சில கூறுகளையும் விவாதிக்கிறார். குறிப்பாக இலக்கியவாதிகளின் மனைவிகள் குறித்துப் பொதுப்புத்தியில் ஊறியுள்ள கருத்தாக்கங்களைக் கேள்விக்குட்படுத்தி அவர் எழுதியுள்ள கட்டுரை மிகவும் முக்கியமானது. தொடர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுவந்த அவர் மொழிபெயர்ப்பு பற்றி எழுதியிருக்கும் கட்டுரை மொழிபெயர்ப்பைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தைத் தரக்கூடியது.
கலைத்தன்மையுடனும் புனைவுக்குரிய சுவையுடனும் உள் அடுக்குகளோடும் அசோகமித்திரன் எழுதியுள்ள இந்தக் கட்டுரைகள் புனைவற்ற எழுத்திலும் மிளிரும் புனைவின் இலக்கியத் தரத்துக்குச் சான்றாக இருக்கின்றன. இந்த நூலைத் தமிழ் இலக்கியப் பரப்பின் படைப்பூக்கம் கொண்ட ஆவணம் என்றும் சொல்லலாம்.
No product review yet. Be the first to review this product.