ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு பாடம் தருபவை. முக்கியமான கடமையைச் செய்ய மேற்கொள்ளும் பயணங்களில் சவால்களையும் எதிர்பாராத திருப்பங்களையும் எதிர்கொள்ளக்கூடும். என்றாலும் பயணங்கள் எப்போதும் இனிமையானவையே. தமிழில் படித்து தமிழைப் பிடித்து உயர்நிலைக்குச் சென்ற ஓர் உயர் அதிகாரி, இந்தத் தமிழ் நெடுஞ்சாலை முழுதும் தன் அனுபவங்களைப் பகிர்ந்தபடி பயணிக்கிறார். ஒவ்வோர் அத்தியாயமும் ஒவ்வொரு மைல் கல்லாக பல செய்திகளைத் தருகின்றன. தமிழ் வழியில் படித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி ஒடிசா மாநில அரசின் உயர் பொறுப்புகளிலும் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உயர் பொறுப்பிலும் இருந்து தம் கடமையைச் சரிவர செய்து பலரின் பாராட்டுப் பெற்றவரின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் முன்மாதிரியாக அமைந்திருக்கின்றன. ஆனந்த விகடனில் வெளிவந்த தமிழ் நெடுஞ்சாலைத் தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. தேர்தலில் ஒவ்வொரு குடிமகனின் வாக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை, ‘கேரள மாநிலம் காக்கயம் அணைப்பகுதியில் ஒரே ஒருவரின் வாக்கைப் பதிவு செய்வதற்காக, அடர்ந்த காட்டுக்குள் ஆறு ஊழியர்கள் மின்னணு இயந்திரத்தைக் கொண்டு சென்று வாக்கைப் பதிவு செய்து வந்தனர்' என்ற செய்தி நமக்குக் காட்டுகிறது. இதுபோல பல சுவையான சம்பவங்களைத் தன் அனுபவங்களோடு சேர்த்துச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் ஆர்.பாலகிருஷ்ணன். தகவல்கள் பல அறிய இனி தமிழ் நெடுஞ்சாலையில் பயணிப்போம் வாருங்கள்!
No product review yet. Be the first to review this product.