'அகிலங்களின் வரலாறு' ஒரு வலிமிகுந்த சூழலில் உருவாயிற்று. ஹைதராபாத் மத்திய சிறையில் கைதியாக இருந்து, புற்றுநோயால் அவதிப்பட்ட தோழர் டி. வி. சுப்பாராவ் அவர்களின் வலியை மறக்கச் செய்ய, அவர் மிகவும் நேசித்த இயக்கத்தின் சர்வதேச வரலாற்றை சொல்லத் துவங்குகிறார்கள் ஆசிரியர்கள். அதுதான் பின்னர் அகிலங்களின் வரலாறாக வடிவம் பெற்றது. சர்வதேச தொழிலாளர் இயக்கத்தில், கம்யூனிஸ்ட் இயக்கத்தில், அகிலங்கள் சித்தாந்த போர்க்களங்களாக இருந்தன. அகிலங்களின் தொடர்ந்த சித்தாந்தப் போர் அறைகளுக்குள்ளேயே முடிந்துவிட்டதாக இருக்கவில்லை. அது, ஆலைகளில் அலுவலகங்களில், குடியிருப்புப் பகுதிகளில், கண்டங்களைக் கடந்து, மனிதசமூகம் மொத்தத்தில் எதிரொலித்தது. எந்தவொரு சமூகத்திலும் சித்தாந்த விவாதங்கள், சித்தாந்த மோதல்கள் தொடர்கின்றனவோ அந்த சமூகம் ஆரோக்கியமானதாக, செயல் ஊக்கமிக்கதாக, புரட்சிகர முன்னேற்றத்தை நோக்கி பயணிப்பதாக இருக்கும். சித்தாந்த விவாதங்களற்று சோம்பிக் கிடக்கும் சமூகம் நோயுற்றதாக, மந்தகதியிலானதாக, தேங்கி நாற்றமடிப்பதாகவே இருக்கும். அகிலங்களின் சித்தாந்த விவாதங்கள், சித்தாந்தப் போர்கள் தொடர்ந்தால்தான், அவை சமூகங்களில் எதிரொலித்ததனால்தான் 19-20 ஆம் நூற்றாண்டுகளில் பல நாடுகள் புரட்சிகளைக் கண்டன. இந்த நூற்றாண்டுகள் புரட்சிகளின் நூற்றாண்டுகளாகவே வரலாற்றில் பதியப்பட்டன.
No product review yet. Be the first to review this product.