2019-ஆம் ஆண்டிற்கான ''சாகித்திய விருதினை வென்ற நாவல்
"தூர்வை', "கூகை' நாவல்களைத் தொடர்ந்து இந்நாவலை எழுதியிருக்கிறார் சோ.தர்மன்.
ரஷியாவின் பிரஷ்னேவ் எழுதிய "தரிசு நில மேம்பாடு' புத்தகத்தில் வரும் ஒரு சம்பவமே நாவலின் கரு என்கிறார்.
எட்டயபுரம் அரசாட்சிக்கு உட்பட்டது உருளைப்பட்டி கிராமம். இங்குள்ள கண்மாயை தூர்வாரி மராமத்துப் பணியை கிராமத்தினர் தொடங்குவதிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த நாவல். கண்மாயின் காவலனாக நீர்பாய்ச்சி, ஊர் பெரிய மனிதர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் என பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்தாலும் வழக்கம்போல் பிரச்னைகள் சூழ கதைக்களம் பல அத்தியாயங்களுக்கு மேல் நகர்கிறது.
மிளகாய், பருத்தியை நேர்த்தியாக சேகரித்து விதைகளாக்கும் பணியும், பிரசித்திப் பெற்ற தேனி, பெரியகுளம், சோழவந்தான், ஆத்தூர் வெற்றிலையைப் போன்று, உருளைக்குடி வெற்றிலையைத் திருத்தி பயிர்செய்வதற்காக மகாலிங்கம் பிள்ளை பகீரத பிரயத்தனம் செய்து கிணறு வெட்டி அந்தக் கிணற்றிலேயே இறந்த நிகழ்வும், தன் நிலத்தில் மேய்ந்த ஆட்டை துப்பாக்கியால் சுட்டு அதனால் ஏற்பட்ட ஊர்ப் பிரச்னையால் பொதுமக்கள் பல மைல் தூரம் சுற்றிச் செல்லும் நிலைமை ஏற்பட்டும் ஒற்றுமையுடன் செயல்பட்ட உருளைக்குடி மக்களின் மனநிலை என பல நிகழ்வுகள் வெகுநேர்த்தியாக விவரிக்கப்பட்டுள்ளன.
நீர்நிலைகளை நம்பியே விவசாயம், அதை எவ்வாறு பராமரித்து தங்களுக்குச் சாதகமாக்கி கொள்வது என்பதை விவசாயிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் தெரிந்து கொள்வதற்கு இந்த நாவல் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
பக்கங்களின் எண்ணிக்கை அதிகம் என்றாலும் சொல்லும் பாங்கில் உள்ள நயமும், அள்ளித் தெளிக்கப்பட்டுள்ள சொலவடைகளும், கிராமத்து நையாண்டிகளும் வாசிப்பவர்களுக்கு இந்த நாவல் நிச்சயம் திருப்தியைத் தரும் என நம்பலாம்.
No product review yet. Be the first to review this product.