நமது ஆதி முன்னோர்களே தொல்குடிகள். அவர்களின் வாழ்வும் வரலாறும் நமது அடையாளங்களின் உருமாற்றங்களைத் தெரிந்துகொள்ள உதவுகின்றன. ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் எட்கர் தர்ஸ்டனும் காதம்பி ரங்காச்சாரியும் தென்னிந்தியச் சாதிகளையும் குடிகளையும் பற்றிய விவரங்களைத் தொகுத்தனர். அவற்றில் வரும் தமிழகத் தொல்குடிகளை இந்த நூலில் தொகுத்து, செம்மைப்படுத்தியிருக்கிறார் மானிடவியலாளர் பக்தவத்சல பாரதி. இந்தத் தொகுப்பில் அடியான்,தோடர், குறும்பர், முதுவர் போன்ற 24 தொல்குடிகள் பற்றிய செய்திகள் தனித்தனி இயல்களில் ஆவணப்படம் போல காட்சிப்படுத்தப்படுகின்றன. தமிழரின் தொன்மையும் தொடர்ச்சியும் நீண்ட, நெடிய, அறுபடாத மரபு கொண்டவை என்பதை ஒவ்வோர் இயலும் நிதர்சனமாக்குகின்றது. உலகிலேயே தோடர்கள் மட்டுமே சைவ ஆயர்குடிகள்; சொந்த மகளைத் திருமணம் செய்யும் வழக்கம் தமிழகத் தொல்குடிகளில் இருந்தது; கோத்தர்கள் பஞ்சகம்மாளர் செய்யும் ஐந்து தொழில்களையும் செய்பவர்கள்; காமடராயரே ஆதி சிவன்; ரங்கநாதரே ஆதி விஷ்ணு போன்ற ஏராளமான அபூர்வ தகவல்கள் இந்த நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. இதன் மூலம் தொல்குடிகளை அறியாமல் தமிழ்ச் சமூகத்தையும் பண்பாட்டையும் புரிந்துகொள்ள முடியாது என்பதை இந்த நூல் உணர்த்துகிறது. தமிழரின் ஆதி சமூக வரலாற்று தரிசனமாக மிளிரும் இந்த நூல், இன வரைவியல் நோக்கில் ஒரு முக்கியமான தமிழ்ப் பண்பாட்டு ஆவணம்.
No product review yet. Be the first to review this product.