வாழ்பனுபவங்கள் கோடி. ஒவ்வொரு கணமும் அனுபவமே. வீட்டில் குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு கணமும் பொற்கணமே. பார்க்க நமக்குக் கண்ணிருக்கவேண்டும். அனுபவங்களில் இருந்து தொடங்கி மேலும் சில தூரம் பறந்து காற்றில் எழுவதற்கான முயற்சிகள் இவை. அனுபவங்களும் அவை எழுப்பிய எதிரொலிகளும் அடங்கியவை. இவற்றில் உள்ள புனைவுக்கூறு ஒன்றுதான். அனுபவங்கள் இயல்பானவை. ஒரு மையம், ஒரு திறப்பு நிகழும்விதமாக இதை அமைக்கும்போது நாம் மறு ஆக்கம் செய்யவேண்டியுள்ளது. அங்கு புனைவு வந்து சேர்கிறது.
என் அனுபவங்கள் எனக்கு மட்டும் உரியவை. என் குழந்தை எனக்கு அளிக்கும் பரவசம் தந்தையாக இருப்பதனாலேயே நான் அடைவது. அது பிறருக்குக் கிடைக்காமல் போகக்கூடும். ஆனால் அவ்வனுபவத்தை நான் மானிடப் பொது அனுபவத்தின் தளம் நோக்கி நீட்டினால் எல்லா அனுபவங்களும் எல்லோருக்கும் உரியனவாகிவிடுகின்றன. "இந்நூலைத் தொடுபவன் என்னைத் தொடுகிறான்" என்றார் ஓர் எழுத்தாளர். இச்சிறு நூலைப் பற்றி அதைச் சொல்லத் துணிவேன்.
No product review yet. Be the first to review this product.