மங்கோலிய மேய்ச்சல்நில நாடோடி மக்களின் மகத்தான நாகரிகம், நவீனத்துவத்தின் வன்முறைத் தாக்குதல்களால் மறைந்துபோன அவலம் பற்றிய நாவல் ‘ஓநாய் குலச்சின்னம்’. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயிர் கொண்டிருந்த மேய்ச்சல் நிலம் என்ற பெரிய உயிர் சில ஆண்டுகளுக்குள்ளாகப் படுகொலை செய்யப்பட்ட வரலாற்று நிகழ்வின் புனைவு. ஓநாய் குலச்சின்னமானது மேய்ச்சல் நிலத்தின் ஆன்மா. மங்கோலிய மேய்ச்சல் நில நாடோடி மக்களின் ஞான குருவாகவும், போர்க் கடவுளாகவும், மேய்ச்சல்நிலக் காவலனாகவும், குலச்சின்னமாகவும் விளங்கிய ஓநாய்கள் ‘புரட்சிகர நடவடிக்கை’கள் மூலம் அழித்தொழிக்கப்பட்டு மேய்ச்சல்நில ஆன்மா சிதைவுற்ற கதை. மேய்ச்சல்நில ஓநாய்களின் வசியத்திற்கு ஆட்பட்டு ஓநாய்கள் குறித்து நேரடி அனுபவமும் ஞானமும் பெறுவதற்காக ஒரு ஓநாய்க்குட்டியை எடுத்து வளர்த்த ஒரு சீன இளைஞனின் பார்வையில் உருவாகியிருக்கும் படைப்பு. 2004ஆம் ஆண்டு வெளியான இந்தச் சீன நாவல் அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக சீனாவில் நாற்பது லட்சம் பிரதிகள் விற்பனையானது. இங்கு, புல்லும் மேய்ச்சல் நிலமும்தான் பெரிய உயிர். மற்றவை சிறிய உயிர்கள். அவை உயிர் வாழ்வதற்குப் பெரிய உயிரையே சார்ந்திருக் கின்றன. ஓநாய்களும் மனிதர்களும்கூட சிறிய உயிர்கள்தான். புல்லைத் தின்னும் ஜீவன்கள், இறைச்சி உண்ணும் ஜீவன்களைவிட மோசமானவை. உன்னைப் பொறுத்தவரை மான்கள்மீது இரக்கம் காட்டவேண்டும். புல்மீது இரக்கம் காட்ட வேண்டியதில்லை, அப்படித்தானே? மான்களுக்குத் தாகம் ஏற்படும்போது அவை தண்ணீர் குடிக்க நதிக்கு விரைகின்றன. குளிரெடுத்தால் மலையில் ஒரு இதமான இடத்துக்கு ஓடிக் குளிர்காய்கின்றன. ஆனால் புல்? புல் பெரிய உயிர். எனினும் அது மிக எளிதாகச் சிதையக்கூடிய மிகப் பரிதாபகரமான உயிர். அதன் வேர்கள் ஆழமற்றவை. அதன் மண் மிக லேசானது. அது நிலப்பிரதேசத்தில்தான் வாழ்கிறது என்றாலும் அதனால் ஓட முடியாது. எவரும் அதன்மீது ஏறி மிதிக்கலாம்; உண்ணலாம்; மெல்லலாம்; கசக்கலாம். குதிரை அதன் பெரும்பரப்பில் மூத்திரம் அடிக்கலாம். அது மணலிலோ, பாறைப் பிளவுகளிலோ முளைத்து வளர்ந்தால் இது இன்னும் குறைந்த நாட்களே உயிர் வாழும். அவை பூப்பதில்லை என்பதால் அவற்றால் தம் விதைகளைப் பரப்ப முடியாது. மங்கோலியர்களாகிய எங்களைப் பொறுத்தவரை புல்லை விட வேறெதுவும் எங்களுடைய இரக்கத்துக்கு உரியதல்ல.
No product review yet. Be the first to review this product.