பத்திகள் எழுதுவதில் ஒரு சுதந்திரம் இருப்பதை உணரமுடிந்தது. பத்திரிகை நிருபர் போன்ற வேலை இல்லை அது. எழுத்தாளர்கள் தங்களது பார்வையை வெளிப்படுத்தும் அரங்கம் அது. எல்லோரும் பார்க்கும் விஷயத்தைதான் அவர்கள் எழுதினாலும் அவர்களது பார்வை தனித்துவமானது என்று காண்பிக்க முடிந்தது. இன்று நியூயார்க் டைம்ஸ், கார்டியன் போன்ற பத்திரிகைகளில் எழுதும் மிகப் பிரபலமான பத்தி எழுத்தாளர்களில் பல பெண்களின் பெயர்களும் இருக்கின்றன. பெண்ணின் பார்வை தனித்துவமானது என்று நான் நினைக்கிறேன். அவளுடைய அனுபவங்கள், வளர்ப்பு அவளைச் சுற்றியிருக்கும் சமூகத்தின் தாக்கம் எல்லாம் ஆணின் வளர்ப்பு, அனுபவங்களிலிருந்து வேறுபட்டவை. அவளது உணர்வுகளுக்குத் துல்லியதை ஏற்பத்துபவை. அவளுக்கு ஏற்படும் பாதிப்புகளை அவள் மட்டுமே உணருவாள். தன்னைப் பீடிக்கும் தளைகளை அறுத்துக்கொண்டு அவள் வெளியேறும்போது அதனால் அவளுக்கு ஏற்படும் காயங்களையும் விடுதலை உணர்வையும் ஒரு ஆண் உணர்ந்துகொள்ள முடியுமா என்பது சந்தேகம். பல நாடுகளில் பார்த்த பெண்கள், என்னைச் சுற்றி இருக்கும் தோழிகள், பல இடர்களை மீறி அவர்கள் சாதித்த சாதனைகள் எல்லாவற்றையும் பார்த்து நான் மிகவும் நெகிழ்ந்திருக்கிறேன். அத்தகைய உணர்வுகளையும், என்னுள் கிளர்ந்த எண்ணங்களையும்தான் இந்தக் கட்டுரைகளில் நான் தெரிவித்திருக்கிறேன். - வாஸந்தி
No product review yet. Be the first to review this product.