Skip to product information
தெய்வங்களும் சமூக மரபுகளும்

தெய்வங்களும் சமூக மரபுகளும்

Rs. 80.00

எழுத்தாளர் : தொ. பரமசிவன்

பதிப்பகம் :  காலச்சுவடு பதிப்பகம்

தோன்றிய காலந்தொட்டே நம்பிக்கைகள் சார்ந்திருந்த தெய்வங்கள் காலப்போக்கில் பல்வேறு சமூக நடைமுறைகளாலும் சமூகப் பிரிவுகளாலும் தத்தமக்கான மரபுகளை உருவாக்கிக்கொண்டன. தமிழ்ச் சமூகத்தில் பெருந்தெய்வங்கள் [சிறு தெய்வங்கள்] என்கிற வகைப்பாடு புறநானூற்றிலேயே பதிவு பெற்றுவிட்டதையும் அதன் பின்புலத்தையும் தொட்டுக் காட்டுகிறார் தொ.ப.

வாலியோன் என்கிற பலராமன் வழிபாடு வழக்குக் குன்றி மறைந்துவிட்டது என்று எழுத்துச் சான்றுகள் கொண்டு எவரும் சொல்லிவிடலாம். வெள்ளைச்சாமி, வெள்ளைக்கண்ணு முதலிய பெயர்களின் தொடர்ச்சியில் அதன் எச்சங்கள் நிலவுவதைத் தொ.ப.தான் கண்டுகாட்ட முடியும்.
கள்ளழகர் என்பது மாயனின் கள்ள அழகு வழிப்பட்டதென்பது பௌராணிகம். ஆனால் கள்ளர் சமூகத்தார்க்கும் அழகருக்குமான தொடர்பில் முகிழ்த்தவர் கள்ளழகர் என்பதைத் தொ.ப. கள ஆய்வின் மூலம் கண்டு வரலாற்றுப் பின்னணி தேடி நிறுவுகிறார்.

தமிழ் வைணவம் வைதிகப் பிடிக்கு வெளியே பரவிய விதத்திற்கு, திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் மீனவர் மாப்பிள்ளையாகத் திருமலைராயன் பட்டினம் எழுந்தருளும் விழாவும் ஒரு சான்று என விவரிக்கிறார் தொ.ப.

தமிழகக் கோயிலமைப்புகளின் பின்னணியில் அழகர் கோயில் அமைப்பைத் துல்லிய வரையறைகளுடன் விளக்கும் தொ.ப. கோயிலமைப்புச் சாத்திர வரம்பை நெகிழ்த்தும் பெருங்கோயில்கள் அமைந்திருப்பதைக் காட்டுகிறார்.

தெய்வம், - சமூகம், - மரபு என்னும் மூன்று புள்ளிகளைக் கொண்டு வரலாற்றுப் பின்னணியில் தமக்கேயுரிய பண்பாட்டுக் கூர்நோக்கில் தொ.ப. வரைந்த கோலங்களின் ஒரு தொகுப்பு இது.

- பா. மதிவாணன்

You may also like