இந்நாவலின் பிரதானப் பாத்திரம் நெஹ்லூதவ் ஒரு லட்சியப் பாத்திரமாக இருக்கிறான். அன்றாட வாழ்க்கை அவலங்களிலிருந்து விடுபட விரும்புபவனாக இருக்கிறான். கிட்டத்தட்ட ஒரு புனிதரைப் போல வலம்வருகிறான். நெஹ்லூதவ் போன்ற ஒரு பாத்திரம், யதார்த்தத்தில் அபூர்வமானது. ஆனால், யதார்த்தத்தில் இருப்பதைச் சொல்வதுதான் இலக்கியம் என்று சுருக்கிவிட முடியாது இல்லையா? ஒரு சமூகம் என்னவாக இருக்க வேண்டும் என்று எழுத்தாளர் கனவுகாண்கிறாரோ அதுவே இலக்கியமாக அவரிடமிருந்து உருப்பெறுகிறது.
டால்ஸ்டாய் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று பேசுகிறார். சிறிது சிறிதாக நடந்த மாற்றங்களால் நாம் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளையெல்லாம் இயல்பானதாக எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டோம்; நம் கண் முன்னே நடக்கும் அவலங்களை அப்படிக் கண்ணை மறைத்துக்கொண்டு கடந்துபோகாதீர்கள் என்று சொல்கிறார்.
‘வீடு கட்டுவதற்காக ஒருவன் கல்லை வைக்கும்போது, இந்த உலகத்தைக் கட்டமைப்பதில் தன்னுடைய பங்கையும் அளிக்கிறோம் என்ற உணர்வுதான் மானிடம்’ என்கிறார் பிரெஞ்சு எழுத்தாளர் எக்சுபெரி. இதையே வேறு வார்த்தைகளில், நம் கண் முன்னே நடக்கும் குற்றங்களுக்கு, நம் கண் முன்னே நடக்கும் சமூக அவலங்களுக்கு நாமும் ஒரு காரணம் என்று நினைப்பதுதான் மானிடம் என்கிறார் டால்ஸ்டாய்!
- த.ராஜன் ( தமிழ் திசை நாளிதழில் வந்த ”புத்துயிர்ப்பு” நாவல் விமர்சனம்”)
No product review yet. Be the first to review this product.