புயேனோசைரிஸ் (அர்ஜெண்டினா) விமானதளத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டுள்ள இக்கதை, விமானப் போக்குவரத்தின் தொடக்கக் காலத்தோடு தொடர்புடையது. அக்காலகட்டத்தில் பெரும்பாலும் தபால் போக்குவரத்துக்காகவே விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. பகல்நேர விமானப்பயணம் பிரச்சினையின்றி இயங்கத் தொடங்கிவிட்டது. மாறாக, இரவுநேர விமானப்பயணம் ஏராளமான சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன. அப்படிப்பட்ட விமானப் பயணத்தைத் தொடர வேண்டுமா என்னும் கேள்வி எழுகிறது. பெரும்பாலானோர் இரவுநேர விமானப்பயணத்தை நிறுத்திவிட வேண்டுமென்றே கருதினர்; அதற்கான அழுத்தமும் கொடுத்தனர்.
ஆனால் விமான சேவையின் பொறுப்பாளரான ரிவியேர், அதனைத் தொடர வேண்டும் என்னும் முடிவில் உறுதியாக இருக்கிறார். இச்சூழலில், அன்றிரவு இயக்கப்பட்ட மூன்று விமானங்களில் ஒன்று விபத்துக்குள்ளாகிறது; எங்கோ விழுந்து நொறுங்கிவிடுகிறது. வீரத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அதன் விமானி பரிதாபமாக உயிரிழக்கிறான்.
இப்போது என்ன செய்யப்போகிறார் ரிவியேர் என்ற கேள்விக்குப் பதிலாக அமைகிறது இந்த நாவல்.
விமானிகளின் வாழ்க்கையைப் பற்றி விவரிக்கும் தொடக்ககால நாவல்களில் முக்கியமானதாகக் கருதப்படும் இந்நாவலில், ‘வினையாற்றுதல்’ குறித்த விவாதங்களும் விழுமியங்களும் முன்னிலைப்படுகின்றன. அதுவே இந்நாவலின் சிறப்பாகும்.
No product review yet. Be the first to review this product.