இலங்கை என்றாலே நம் நினைவுக்கு வருவது புத்தமதமும் இனப் பிரச்சினையும்தான். ஆனால் இன்றைய இலங்கை சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தனித் தீவல்ல, இந்தியாவின் நீட்சியாகவே இருந்தது. அப்படியானால் சிங்களவர் யார், அவர்களின் பூர்வீகம் என்ன, எங்கிருந்து சென்றார்கள் போன்ற வினாக்களுக்கு பக்தவத்சல பாரதியின் இந்நூல் சமூக-பண்பாட்டு மானிடவியல் நோக்கில் விடையளிக்கிறது. இதை, சிங்கள மொழி, சிறீலங்கா உருவாக்கம், இனத்துவம் போன்றவற்றினூடாக சிங்களவர்களின் பண்பாடு, சாதிமுறை, திருமணம், அவர்களிடையே நிலவும் உறவுமுறை முதலியவற்றையும் தனித்தனி இயல்களில் காட்சிப்படுத்துகிறார். சிங்களவர்கள் இந்திய இனத் தொடர்ச்சி கொண்டவர்கள் என்றாலும் மரபணு (டிஎன்ஏ) ரீதியான நெருக்கம் தமிழர்களுடன்தான் அதிகம் என்றும், அவர்கள் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சி கொண்டவர்கள் என்றும் பாரதி கூறுவது ஆர்வமூட்டுவதாய் இருக்கின்றன. இதற்காக சிங்களவர்கள் பௌத்தர்களாயினும் பத்தினித் தெய்யோ (கண்ணகி), கதரகமத் தெய்யோ (முருகன்) உள்ளிட்ட இன்னும் பல தமிழ்த் தெய்வங்களை எவ்வாறு வழிபடுகின்றனர் என்பதில் தொடங்கி தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உள்ள உறவையும் திராவிட உறவுமுறையை அவர்கள் பின்பற்றும் விதத்தையும் விவரிக்கின்றார். மேலும் சிங்களவர்கள் இந்தோ-ஆரிய மொழி பேசினாலும் தமிழ் இலக்கண மரபைப் பின்பற்றும் விதத்தையும் அவர்களின் இயல், இசை, நாடகத்தில் திராவிடத்தின் தாக்கம் பெற்றுள்ளதையும் பாரதி தமது களப்பணி அனுபவத்தின் மூலம் விவரிப்பது இனப்பகையூட்டப்பட்டச் சூழலில் புதிய வெளிச்சத்தைத் தருவதாய் இருக்கின்றது. இதன் மூலம் இனவேறுபாடுகளுக்கு அப்பால் அறிவார்ந்த புதிய உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது இந்தப் புத்தகம். இவையே இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
No product review yet. Be the first to review this product.