அம்பை கதைகள் (1972 - 2017)
Author : அம்பை
Publication : காலச்சுவடு பதிப்பகம்
நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவரான அம்பை கடந்த அரைநூற்றாண்டு காலம் எழுதிய கதைகளின் மொத்தத் தொகுப்பு இந்நூல். அதுகாறும் மறுக்கப்பட்ட உலகின் புதிய குரல் அம்பையினுடையது. திரைச்சீலைகளுக்குப் பின்னும் நிலைக்கதவுகளை அடுத்தும் சமையற்கட்டுக்குள்ளும் புழுங்கித் தவித்தவர்களை வரவேற்பறைக்குக் கொண்டுவந்தவர் அம்பை. இந்தக் கதைகள் உறவுகளால், போராட்டங்களால், கசப்புகளால், தனிமைகளால், அபூர்வமான பரவசங்களால், விம்மல்களால், கண்முன் தன் நிறங்களை இழந்து வெளிறும் சமூகத்தவர்களால், இடர்களை நேர்நின்று எதிர்கொள்ளத் துணிந்தவர்களால், இன்ன பிறவற்றால் ஆனது. இந்தக் கதைகளில் கதைசொல்லி சிறுமியாக, மாணவியாக, களப்பணியாளராக, வளர்ந்த மகளாக, மத்திமவயதை உடையவளாக, ‘மௌஸிஜியாக, தீதியாக’ பல வயதுகளில் வருகிறாள். கதைகளுக்குள் ஊடாடி வரும் சங்கீதமும் பெண்களுக்குள் நிகழும் உறவில் வெளிப்படும் இசைமையும் தாளலயத்தோடு வெளிப்பட்டிருக்கிறது. பெரிய அலையாகவும் பிரம்மாண்டமானதாகவும் நுரையாகவும் பின் கூடிவந்து சேர்வதாகவும் பிறகு குலைந்து போகக்கூடியதாகவும் மீண்டும் எழக்கூடியதாகவும் மூழ்கடிக்கக்கூடியதாகவும் தூக்கி எறியக்கூடியதாகவுமான ஆக்கங்களைக் கொண்ட அம்பையின் மொத்த புனைகதைகளின் உலகம் இது.