கே.என். செந்தில் கதைகள்
Language : Tamil
Author: கே.என். செந்தில்
Publisher Name : Ethir Veliyeedu
புத்தாயிரத்தில் நவீனச் சிறுகதை இலக்கியத்துக்குள் நேர் அசைவுகளை ஏற்படுத்தியவர்களில் கே.என். செந்திலும் ஒருவர். படைப்புகள் மூலமாகவே தன்னுடைய பாதையையும் இடத்தையும் கண்டடைந்தவர். கால் நூற்றாண்டுக் காலமாகத் தொடர்ந்து செயல்பட்டுத் தனது நோக்கையும் புனைவு மொழியையும் கதைப் புலத்தையும் உருவாக்கிக் கொண்டவர். கச்சிதமும் செறிவும் கொண்டது இவரது கதைக் கதைக் கூற்று. அநேகமாக முன் தலைமுறை எழுத்தாளர்களின் சாயலோ எழுத்தாளர்களின் பிரதிபலிப்போ இல்லாமல் தனித்துவமான போக்கைக்கொண்டிருப்பவை இவரது கதைகள். இதுவரையான தொகுப்புகளில் இடம் பெற்றுள்ள கதைகளுடன் புதிய கதைகளும் சேர்ந்தது இந்தத் தொகுப்பு. இவரது வளர்ச்சியையும் திசையையும் இது எடுத்துக் காட்டுகிறது.
கே.என். செந்திலின் கதையுலகம் மனிதர்களால் ஆனது. காலத்தின் கைமாற்றத்தில் உருள்வது. எனவே பெரும்பான்மையான கதைகளில் இடம் சுட்டப்படுவது இல்லை. நம் காலத்து மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? தங்களைச் சுற்றியுள்ள சூழலை ஏன் சிக்கலாக்குகிறார்கள்? சிக்கலுக்குள் அகப்பட்டுக் கொள்கிறார்கள்? தங்களைத் தாங்களே ஏன் களங்கப்படுத்திக் கொள்கிறார்கள்? என்ற ஆதாரமான கேள்விகளைப் பரிவுணர்வுடன் எழுப்புகின்றன இந்தக் கதைகள்.
நவீன இலக்கிய வடிவங்களில் சாதனைக்குரிய வடிவம் சிறுகதையே என்பது என் நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு வாய்த்திருக்கும் புதுச் சேர்க்கை கே.என்.செந்திலின் இந்தப் பெருந்தொகுப்பு.
- சுகுமாரன்