கடல்புரத்தில்
எழுத்தாளர் : வண்ணநிலவன்
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
துளியை நுணுக்கமாகச் சித்திரிப்பதன் வழியாக, வெளியை அதன் விரிவோடு எழுப்பிக்காட்ட முயல்வது எழுத்தின் ஆதாரமான நோக்கங்களில் ஒன்று. இச் சிறுநாவலில் அந்த ரசவாதம் குறைந்த பக்கங்களுக்குள்ளாகவே நிகழ்ந்தேறியிருப்பதைக் காணலாம். ஒரு எளிய மீனவக் குடும்பத்தைப் பற்றியதாகத் தொடங்கும் கதையானது, முடியும் தருவாயில் அக்குடும்பம் வசிக்கும் கிராமத்தை, அது அமைந்திருக்கும் அகண்ட கரையை, அதற்கப்பால் விழிக்கெட்டாத தூரத்திற்கு விரிந்துகிடக்கும் கடலைப் பற்றின கதையாகவும் பெருகிவிடுகிற மாயம் எவ்விதப் பிரயாசையுமின்றி இயல்பாகவே நிகழ்கிறது. இது கடல்புரத்தைக் குறித்த கதை மாத்திரமல்ல; கடலைப் பின்புலமாகக் கொண்டு இயற்கைக்கும் மனிதனுக்கும், பழமைக்கும் புதுமைக்கும், தந்தைக்கும் மகனுக்கும், ஆணுக்கும் பெண்ணுக்கும், அன்பிற்கும் பகைக்கும், உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையிலான சிக்கலான பிணைப்புகளை, அவற்றில் விழுந்துவிடுகிற முடிச்சுக்களை, அவற்றை அவிழ்க்க முயன்று தோற்ற அலைகழிகிற மனத்தின் பாடுகளை எனப் பலதையும் குறித்து ஆதூரத்துடன் பேசுகிறது. முதல்பதிப்பு வெளியாகி முப்பதுக்கும் அதிகமான வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், இன்றும் வாசகர் கவனத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது இந்நாவலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.