பூக்குழி
கொங்கு வட்டாரப் பின்புலத்தில் கதைகளை நிகழ்த்திக் காட்டும்
பெருமாள்முருகன், ‘பூக்குழி' நாவலில் சாதிய முரண் குறித்த உரையாடலை
முன்வைக்கிகிறார். இந்நாவலை அவர் சாதி மீறித் திருமணம் செய்து ‘பலி’யான
தருமபுரி இளவரசனுக்குச் சமர்ப்பித்துள்ளார். இந்த நாவலைப் படிக்கும்
யாருக்கும் தலித், தலித்தல்லாதோர் என்கிற பின்புலத்தில் கதை
எழுதப்பட்டிருக்கலாம் என்று எண்ணவே வாய்ப்பிருக்கிறது. ஆனால் கதை
சாதியின் முரண்களைப் புரிந்துகொள்வதற்கான முயற்சி பற்றியதாக உள்ளது.
புராணங்கள், இதிகாசங்கள், மநு போன்ற புத்தகங்களிலிருந்து சாதி உருவாகி
இருக்கிறதென்று சொல்லி, தங்களுக்கும் சாதிக்கும் எத்தகைய தொடர்பும்
இல்லை என்று இடைநிலைச் சாதிகள் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள
முனையக்கூடும். இந்நாவல் சாதிப் பிரச்சினைகளுக்கு ஆதிக்கச் சாதிகளும்
பொறுப்பேற்க வேண்டும் என்கிறது. இடைநிலைச் சாதிகளின்
சாதி மனோபாவத்தை இப்பிரதி வெளிச்சமிடுகிறது.
சுய விமர்சனத்திலிருந்தே மாற்றங்கள் உருவாகும். அப்படியான விமர்சனத்தை
இந்நாவல் வைக்கிறது. மௌனமாய் இருக்கும் குளத்தில் பெருமாள்முருகனால்
எறியப்பட்ட கல்லுக்கு, சலனத்தை உண்டாக்கும் ஆற்றல் இருப்பதாகச் சொல்ல
முடிகிறது.
Language :Tamil
Author : பெருமாள் முருகன்
Publication : காலச்சுவடு பதிப்பகம்