தீண்டாத வசந்தம் ஒரு அற்புதமான நாவல். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவு செய்து கொள்ள முடியாத நிலையிலும், மனித உரிமைகள் பலவும் மறுக்கப்பட்ட நிலையிலும், வசந்தத்தை தீண்ட முடியாதவர்களாக அல்லற்பட்டு ஆற்றாது நிற்கும் தாழ்த்தப்பட்ட சமூகங்களின் (சக்கிலியர் மற்றும் பறையர்) சில தலைமுறை மாந்தர்களின் உணர்வு பூர்வமான வரலாற்றை இந்நாவல் காட்சிப்படுத்துகிறது. பல நூற்றாண்டுகளாக இந்த மக்கள் தமது அடையாளத்தையும், தமது அங்கீகாரத்தையும் இந்த சமூகத்தில் பெறுவதற்கு எத்தனை போராட்டங்களை சந்தித்தார்கள் என்பதனை ஐந்து தலைமுறைகளின் வாழ்க்கையின் ஊடாக ஜி. கல்யாணராவ் எமக்கு கொண்டு வருகின்றார். காலத்திற்கு, காலம் வேறுபடும் சமூக வழக்கங்களின் மத்தியிலும் பறையர் என்றும், சக்கிலியர் என்றும் ஒதுக்கப்பட்ட மக்கள் எவ்வாறு தமது உரிமைகளை இழந்து வாழ்ந்திருந்தனர் என அவர் கூறுகின்றார். வெள்ளைக்காரர்களின் ஆதிக்கத்திற்கு முன்பதாகவே பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட பார்ப்பன சமூகத்தின் வேடத்தையும் தோலுரித்துக் காட்டுகின்றார் ஆசிரியர். அக்கால மக்களின் நம்பிக்கைகள், கூத்துக்கள் ஊடாக கருத்துக்கள் பரப்பப்பட்ட விதங்கள் என ஐந்து தலைமுறைகளை கடந்த பயணித்து வரும் அனுபவம் நமக்கு கிடைத்து விடுகின்றது. தலைமுறை, தலைமுறையாக தொடரும் தீண்டாமை கலாசாரம், அதற்கு எதிரான மக்களின் போராட்டம் என்ற உருக்கமான கதை மாத்திரமல்ல. அதனையும் மீறி, அவற்றை வெற்றி கொள்ள வேண்டிய கேள்விகளையும் இந்த நாவல் எமக்கு உணர்த்துகின்றது. இந்த நாவலின் ஒவ்வொரு அம்சங்களிலும், ஆந்திரப் பிரதேசத்தின் பொருளாதாரம், அரசியல், சமூக கட்டமைப்புக்கள் பற்றியும் ஆசிரியர் கூறத் தவறவில்லை. இவற்றுக்கும் மேலாக, மோகன்தாஸ் காந்தியினால் ஆரம்பிக்கப்பட்ட அரிசன சேவா சங்க ஊழியர்கள் அமைப்பின் செயற்பாடுகள் குறித்த விமர்சனத்தையும் முன்வைப்பதற்கு ஆசிரியர் தயக்கங் காட்டவில்லை. அரிசனம் என்ற சொல் பயன்பாடு தொடர்பில் விவாதத்தை எழுப்பும் ஆசிரியர் ராமானுசம் என்ற பாத்திரத்தின் வாயிலாக “எப்படியும் பார்ப்பனீய சமூகம் பறைரையும், சக்கிலியரையும் தீண்டத் தகாதவர்களாக்கியது. அரிசனச் சொல்லால் அவர்களை அனாதைகளாகவும் ஆக்குகின்றார் காந்திஜீ” என்ற கருத்தை முன்வைக்கின்றார் ஆசிரியர். எப்போது ஆரம்பித்தது என்று தெரியாத ஒரு பிரச்சினை. பறையர்களும், சக்கிலியர்களும் எவ்வாறு உருவானார்கள் என வேதங்கள் கூறும் காமதேனு கதையில் ஆரம்பித்து, பார்ப்பனீய சமூகத்தினால் உருவாக்கப்பட்ட புராணங்களும், வேதங்களும் எவ்வாறு தம்மை ஒதுக்கிவிட்டு தமது வசதிக்கு ஏற்றவாறு வரலாற்றை அமைத்துக் கொண்டன என்ற உண்மையையும் பல சந்தர்ப்பங்களில் பாத்திரங்களின் ஊடாக முன்வைக்கின்றார் ஆசிரியர். நிறைவடையாத ஒரு பிரச்சினையை எமது முன்னால் நிறுத்துகின்றார். அதற்கான தீர்வுகளை தேடவேண்டிய கட்டாயத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கின்றார்.
No product review yet. Be the first to review this product.