பெரியார், கார்ல்மார்க்ஸ் போன்ற புரட்சிகரச் சிந்தனையாளர்கள் பல்வேறு வடிவங்களில் பிற்போக்கு சக்திகளின் தாக்குதல்களுக்கு ஆட்பட்டவர்களாகவே இருக்க நேர்வது தவிர்க்க இயலாத ஒன்று. எனினும் காலம் அவர்களைச் சரியாகவே மதிப்பிடுகிறது. மார்க்சியம் தோற்றுவிட்டது எனச் சொன்னவர்கள் எல்லாம் தலைகுனியும் அளவிற்கு இன்று அவரது 200ம் பிறந்தநாள் உலக அளவில் கொண்டாடப்படுவது ஒரு சான்று. பெரியாரும் அதே போல அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி இன்றும் தாக்குதலுக்கு உள்ளாகிறார். பார்ப்பனர்களும் வருணாசிரம சக்திகளும் பெரியாரைத் தாக்குவதைப் புரிந்து கொள்ள முடியும். சாதிப் படிநிலையில் எந்த அடுக்கில் இருந்தாலும் தமக்குக் கீழாக ஒரு பிரிவு இருக்க வேண்டும் என எண்ணுபவர்கள் அவர்கள். ஆனால் தமிழ்த் தேசியம் பேசுபவர்களும், தலித் அறிவுஜீவீவிகளில் ஒரு சாரரும் பெரியாரை எதிர்க்க நேர்ந்ததுதான் கொடுமை. அப்படியான ஒரு எதிர்ப்பு 1990 களில் மேலெழுந்த போது உடனுக்குடன் அவர்களுக்குப் பேராசிரியர் அ. மார்க்ஸ் பதில் அளித்து எழுதிய ஆழமான ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இது. இவை எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பெரியார் எதிர்ப்பாளர்களால் பதிலளிக்க இயலவில்லை என்பதை இந்நூலை வாசிக்கும்போது நீங்கள் உணரலாம். இந்த நூலின் இரண்டாம் பகுதியாக அமைந்துள்ள பெரியாருக்கும் முஸ்லிம்களுக்குமான உறவு குறித்த கட்டுரைகள் இதுகாறும் தமிழில் வெளிவராத பல புதிய செய்திகளை உள்ளடக்கியுள்ளன. மூன்றாம் பகுதியாக அமைந்துள்ள கட்டுரைகள் பெரியார் ஒரு வறட்டுச் சித்தாந்தி அல்ல, அவர் ஒரு மாபெரும் மனிதநேயர் என்பதைப் பறைசாற்றுகின்றன. பெரியாரை முற்றிலும் புதியதொரு கோணத்தில் இருந்து எழுதிவரும் அ. மார்க்ஸ் பெரியாரியலுக்கு அளித்துள்ள இன்னொரு முக்கிய பங்களிப்பு இந்த நூல்.
No product review yet. Be the first to review this product.